Wednesday, April 18, 2012

தனியார் பள்ளிகளில் மாணவர்களில் நிலை..

சற்று முன் எனது நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது வேதனையுடன் கூறிய விஷயம் .அவருடைய மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புக்கு செல்கிறார். இதில் என்ன வருத்தமான விஷயம் என்று கேக்கலாம்? இன்னும் தொடர்ந்து படியுங்கள் . பொதுவாக முன்பெல்லாம் பள்ளிகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து 4.30 மணி வரை நடக்கும். ஆனால் இப்பொழுது தனியார் பள்ளிகளுக்கிடையான போட்டியினால் மாணவர்களை படிக்க வைக்கிறோம் என்ற பெயரில் சித்ரவதை தான் நடக்கிறது.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் மாணவர்கள் காலை 5.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் , இரவு ஏழு மணி வரை பள்ளியில் படிக்க வேண்டும். இதனால் காலை உணவையும் மதிய உணவையும் எடுத்து வரவேண்டும். காலை 5.30 மணிக்கு வரவேண்டும் என்றால் 4.30மணிக்கு எழுந்தால் தான் வரமுடியும். வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள் மூன்று மணிக்கே எழுந்து பேருந்தில் வரவேண்டும். இவர்களின் பெற்றோர்கள் அதற்கு முன்னரே எழுந்து உணவு தயார் செய்து பள்ளிகளை அனுப்ப வேண்டும்.

இதில் கொடுமை என்னவென்றால் , பள்ளிகள் கல்வி கட்டணம், பேருந்து கட்டணம், புத்தகம் மற்றும் நோட்டு களுக்கான கட்டணம் தவிர, இந்த சிறப்பு வகுப்புகளுக்கு தனியாக 20000 ரூபாய் வசூலிக்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் அவர்களால் காலை உணவும், மதிய உணவும் பிள்ளைகளுக்கு கொடுத்து விட முடியவில்லை என்றால் , கவலை படவேண்டாம். பள்ளியே அவர்களுக்கு அதை கொடுத்துவிடும். என்ன ஒரு கருணை என்கிறீர்களா ?
அதுதான் இல்லை. அந்த உணவுக்காக கூடுதல் 10000 ரூபாய் கொடுக்கவேண்டும். வருடத்தில் மூன்றே நாட்கள் மட்டும் மாணவர்கள் இந்த கொடுமையிலிருந்து தப்பித்து கொள்ளலாம்? தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் விடுமுறை. ஆனால் அன்றும் ஏதாவது வீட்டுபாடம் கொடுத்து மாணவர்களை பிஸி ஆக்கிவிடுவார்கள்.

இது சம்பந்தமாக நடந்த பெற்றோர் கூட்டத்தில் இப்படியெல்லாம் மாணவர்களை கொடுமை படுத்தபோவதாக பெருமையாக கூறிய பொழுது , ஒரு சில பெற்றோரை தவிர மற்றவர் எவரும் இது சம்பந்தமாக வாயை திறக்கவில்லை. நமது நண்பர் மட்டும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். உடனே மற்ற பெற்றோரும் நாங்களும் இதை தான் சொல்ல நினைத்தோம், நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்றனர். கூட்டம் முடிந்தவுடன் நமது நண்பரை பள்ளி நிர்வாகம் தனியே அழைத்து , அவரின் தைரியத்தை பாராட்டும் விதமாக " உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இப்போதே உங்கள் மகனின் டீ சி வாங்கிகொள்ளுங்கள்" என்று கூறி இருக்கிறார்கள் . அவரும் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கலாம் என்று விசாரித்த பொழுது அங்கேயும் அதே கொடுமை நடக்கிறது. வேறு வழியில்லாமல் அதே பள்ளியில் அவர் மகன் படிக்கிறார். இதே நிலை 12 ஆம் வகுப்பு முடியும் வரை இதே சூழ்நிலை (கொடுமை) தான்.

மாணவர்களை படிக்கவைக்க வேண்டியது தான். ஆனால் அதுக்காக இப்படியா? அவர்களின் மனநிலையை நினைத்து பார்க்கவேண்டாமா? எல்லா மாணவர்களும் நூறு மதிப்பெண்கள் வாங்கினாலும் , எல்லோரும் புத்திசாலியாக இருப்பார்களா? மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் கால கட்டத்தில் படிப்பதற்கு அல்லது படிக்க வைப்பதற்கு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
இதற்கு என்ன செய்யலாம் என்பதையும் மேலும் இது சம்பந்தமான கருத்துக்களை தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment