Monday, April 16, 2012

கேன்ஸர் செல்களை அழிக்கும் திரிபலா

கேன்ஸர் செல்களை அழிக்கும் திரிபலா
கீதா


யுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் திரிபலா என்ற மூலிகை கணையப் புற்று நோய் வராமல் தடுப்பதாக பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள புற்று நோய் மையத்தின் புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணையப் புற்று நோயால் பாதித்த சுண்டெலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. மூன்று வெவ்வேறு மூலிகைகள் சேர்ந்த உலர்ந்த பொடித்த திரிபலாவை சுண்டலிகளுக்கு கொடுத்ததில் புற்று நோயால் பாதித்த கணைய செல்கள், சாதாரண செல்கள் தினமும் அழிவதைப் போல அழிந்தது தெரியவந்துள்ளது.

பொதுவாக நம் உடலில் இருக்கும் கேன்சர் பாதித்த செல்கள் சீரற்ற முறையில் வளர்ந்துகொண்டுதான் இருக்கும். அழிந்த, தேவையில்லாத சாதாரண செல்கள் தினமும் அழிவதைப்போல அழியாது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் நடந்த அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

"இரைப்பை, குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூலிகை திரிபலா. திரிபலாவை நீரில் கலந்து சாப்பிடும்போது பசியைத் தூண்டும் என்பதுடன் ஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். தவிர, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். சுண்டெலிகளுக்கு திரிபலா பொடியைக் கொடுத்ததில் கேன்சர் செல்களை அழிப்பதில் எந்தக் பக்க விளைவும் இல்லாமல் முழு வேகத்துடன் செயல்பட்டது உறுதியானது" என்கிறார் டாக்டர் சஞ்சய் கே.ஸ்ரீவத்சவா.இந்த ஆராய்ச்சியில் பிரதானப் பங்கு வகித்த இவர், பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

இந்த ஆராய்ச்சி பற்றி விளக்கிய சஞ்சய் ஸ்ரீவத்சவா, "மனிதர்களைப் பாதித்த கணையப் புற்று நோய் செல்களை சுண்டெலிகளுக்குச் செலுத்தி, தினமும் 2 மி.கிராம் திரிபலா பொடியை வாரம் ஐந்து நாட்கள் கொடுத்தோம். திரிபலா கொடுக்காத சுண்டெலிகளைவிட வேகமாக இவற்றின் புற்று நோய் செல்கள் அழிக்கப்பட்டன. செல்களில் உள்ள புரதத்தின் அளவும் அதிகரித்தது. அதிகம் பேரைப் பாதிக்கும் புற்று நோய்களில் கணையப் புற்று நோய் 5வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இதில் ஆராய்ச்சி செய்துவருகிறோம்" என்கிறார்.

இந்த ஆராய்ச்சி பற்றி சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் டாக்டர் வனிதா முரளிகுமார் சொல்வது, "இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின்மேல் ஒரு புதிய வெளிச்சத்தை இந்த ஆராய்ச்சி முடிவுகள் கொடுத்துள்ளன. கடுக்காய், நெல்லிக்காய், தன்ரிக்காய் இந்த மூன்றையும் காய வைத்து பொடியாக்கி செய்யப்படுவதுதான் திரிபலா. ஆயுர்வேத மருத்துவத்தில் 1000 ஆண்டுகளாக திரிபலா, வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது. தவிர, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் தோலின் பளபளப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் திரிபலா சாப்பிட்டால் உடலின் உள்உறுப்புகளை அம்மா, குழந்தையைப் பாதுகாப்பதுபோல பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உண்டு" என்கிறார்.

No comments:

Post a Comment